ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் :
15 பேர் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று குழந்தைகள், பெண்கள் உள்பட 15 பேர் குழுவாக மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கையில் பட்டா, மனு ஆகியவற்றுடன் 2 கேன்களில் மண்எண்ணெயை மறைத்து எடுத்து வந்தனர். மேலும் அவர்கள் திடீரென தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்களை தடுத்தனர். அதையடுத்து அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தினர்.
பட்டா நிலம் ஆக்கிரமிப்பு
விசாரணையில், தீக்குளிக்க முயன்றவர்கள் தோட்டனூத்தை சேர்ந்த மருதமுத்து (வயது 75), அவருடைய மனைவி வெள்ளையம்மாள் மற்றும் அவர்களுடைய மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள் ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களுடைய பட்டா நிலத்தை மீட்டு தரக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்றொரு சம்பவம்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பெண் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரையும் போலீசார் தடுத்து மீட்டனர். பின்னர் அவருடைய உடலில் தண்ணீரை ஊற்றினர். அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த ஜேம்ஸ் மனைவி சகாயமேரி (52) என்பது தெரியவந்தது. மேலும் லாரி டிரைவரான ஜேம்ஸ், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
எனவே இறப்பு சான்றிதழ் கேட்டு 12 ஆண்டுகளாக மனு கொடுத்தும் கிடைக்காததால் விரக்தியில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.