ரூ.18 ஆயிரம் தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும்-ஆஷா பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
ரூ.18 ஆயிரம் தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று ஆஷா பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல்,
தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் சங்கத்தினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆஷா பணியாளர்களாக வேலை செய்து வருகிறோம். மத்திய, மாநில அரசுகளின் அனைத்து சுகாதார, மருத்துவ நலத்திட்டங்களையும் கிராமப்புறங்களில் செயல்படுத்துவதில் நாங்கள் முழுமையாக பங்காற்றி வருகிறோம்.
கொரோனா காலத்தில் அரசின் அனைத்து தடுப்பு திட்டங்களையும் கிராம மக்களிடையே கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தி முன்கள பணியாளர்களாக பணி புரிந்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் இதுவரை வழங்கப்படவில்லை. ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை மட்டுமே எங்களுக்கு மாத சம்பளம் கிடைக்கிறது.
ரூ.18 ஆயிரம் ஊதியம்
எனவே 15 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வரும் ஆஷா பணியாளர்களை சுகாதாரத்துறையில் தகுந்த பணிகளில் பணி அமர்த்த வேண்டும். மாதம் ரூ.18 ஆயிரம் தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும். நீண்ட காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கொரோனா கால நிவாரணமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மாநில சுகாதாரத் துறையின் மூலம் பணியாளர் அடையாள அட்டை வழங்க வேண்டும். கர்ப்பிணிகளை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல 108 வாகனம் கிடைக்காதபோது பஸ்களில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. எனவே எங்களுக்கு அரசு பஸ்களில் பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.