கடைகளை அடைத்து நகை வியாபாரிகள் போராட்டம்
தனித்துவ அடையாள எண் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் நகை வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தனித்துவ அடையாள எண்
தங்க நகைக்கடைகளில் விற்கப்படும் நகைகளில் 6 இலக்கம் கொண்ட தனித்துவ அடையாள எண்ணை (எச்.யு.ஐ.டி.) பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய தரநிர்ணய ஆணையம் அறிவித்து உள்ளது.
இதன்மூலம் நகைகளை தயாரிப்பவர், விற்பவர், வாங்குபவர்களை அறிந்து கொள்ளலாம். இது தனிநபரின் உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாக கூறி, நகை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் புதிய முறையை எதிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று நகை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி காலையில் 2½ மணி நேரம் நகைக்கடைகள் அடைக்கப்பட்டன.
நகை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை நகை கடைகள் அடைக்கப்பட்டன. இதில், மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நகை கடைகள் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே திண்டுக்கல் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத்தினர் திண்டுக்கல் மெயின்ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சுந்தரேசன், துணை தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர் மணிவண்ணன் உள்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது தனித்துவ அடையாள எண் பதிவு முறையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
-------