பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
பெரும்பாறை அருகே பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, தடியன்குடிசை உள்ளிட்ட இடங்களில் சமீபகாலமாக காட்டு யானைகள் வலம் வருகின்றன.
அதன்படி நேற்று காலை பெரும்பாறை அருகே 10-க்கும் மேற்பட்ட தோட்டங்களில் காட்டு யானைகள் திடீரென புகுந்தன. பின்னர் தோட்டத்தின் முள்வேலி, இரும்பு கேட் ஆகியவற்றை சேதப்படுத்தின.
மேலும் தோட்டங்களில் பயிரிட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு போன்ற பயிர்களை நாசப்படுத்தின. இந்தநிலையில் பெரும்பாறை அருகே உள்ள கொங்கப்பட்டி பகுதியில் விவசாயி தங்கவேல் என்பவரின் தோட்டத்துக்குள் 4 யானைகள் புகுந்து, முள்வேலி மற்றும் அங்கு பயிரிட்டிருந்த காபி, வாழை ஆகிய பயிர்களை சேதப்படுத்தின.
எனவே சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், காட்டு யானைகள் தோட்டங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்த தகவல் அறிந்து வத்தலக்குண்டு வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில், வனவர் ஜலில், வனக்காப்பாளர் பீட்டர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் புகை மூட்டம் போட்டும், பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.