திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தனியார் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் தர்ணா
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தனியார் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் தர்ணா
திருப்பூர்,
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தனியார் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தொலைபேசி மூலமாக கலெக்டர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து மனுக்களை கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்றும் மக்கள் அதிக அளவில் வந்து மனு கொடுத்தனர்.
அதுபோல் தாசில்தார் அலுவலகங்களிலும் மக்கள் மனுக்களை கொடுத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதலிபாளையம் பிரிவு, புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மக்கள் மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று கலெக்டரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
குழு அமைத்து விசாரணை
பின்னர் மனு அளிக்க வந்தவர்களில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் கலெக்டரை சந்திக்க போலீசார் அழைத்துச்சென்றார்கள்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருக்குமரன் புரமோட்டர்ஸ் டி.கே.எஸ். நகர் என்ற பெயரில் புதுப்பாளையம், முதலிபாளையம் பிரிவு உள்ளிட்ட 7 இடங்களில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை விற்பனை செய்தார்கள். அதில் சிலர் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். ஆனால் இதுவரை நிலம் வாங்கிய எங்களது பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் உள்ளனர். மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற முடியாத நிலை உள்ளது. 6 வீடுகளுக்கு ஒரு மின் இணைப்பு பெற்று மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறோம். இது குறித்து ஏற்கனவே பலமுறை முறையிட்டும், கண்டன போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை. எனவே எங்களுக்கு அவரவர் பெயரில் பத்திரப்பதிவு செய்து வழங்கி உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வினீத், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, ஆர்.டி.ஓ. ஜெகநாதன் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் குழு அமைத்து இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.