தூத்துக்குடியில் கடைகளை அடைத்து நகை வியாபாரிகள் போராட்டம்
தூத்துக்குடியில் நேற்று நகை கடைகளை அடைத்து நகை வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று நகை கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
தர நிர்ணயம்
இந்திய தர நிர்ணய ஆணையம் தங்க நகைகளின் தரத்தை குறிக்க, நகைகளில் ஹால்மார்க் முத்திரை பதிக்க அறிவுறுத்தி இருந்தது. அதன்படி தங்கநகைகளில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த முத்திரையுடன், எச்.யு.ஐ.டி. என்ற தனி அடையாள எண்ணையும் பதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் நகை வியாபாரிகள் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் நகை வியாபாரிகள் நேற்று காலையில் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் சுமார் 300-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. நகைக்கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் கடை முன்பு, ஹால் மார்க் தனி அடையாள எண் திட்டத்தை எதிர்த்து பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். பின்னர் வழக்கம் போல் கடைகளை திறந்து வியாபாரத்தை மேற்கொண்டனர்.
பாதிப்பு
இதுகுறித்து தூத்துக்குடி தங்கம், வெள்ளி, முத்து, வைரம் நகை வியாபாரிகள் சங்க செயலாளர் ஸ்ரீதர் கூறுகையில், “தங்க நகைகளுக்கு ஹால்மார்க் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அந்த நகைகளுக்கு எச்.யு.ஐ.டி. என்ற தனி அடையாள எண்ணையும் பதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தால் சிறு நகை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சிறிய கடையிலோ, தனியாக வீடுகளில் வைத்து நகை செய்யும் தொழிலாளி ஒவ்வொரு நகையாக வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப செய்து கொடுப்பார்கள். ஒவ்வொரு நகையாக அடையாள எண் பெறுவது மிகவும் சிரமம் ஆகும். அதே நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு நகையை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். ஆகையால் இந்த தனி அடையாள எண் பதிவு திட்டத்தை கைவிட வேண்டும்” என்றார்.