திருமண நாளில் ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே மனைவி பிரிந்து சென்ற சோகம் தாங்காமல் திருமண நாளில் ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஊர்க்காவல்படை
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் புதுப்பட்டு கிராமம் மதுரா, உப்பரப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் நடராஜ் (வயது 28). இவர் திருவள்ளூர் பகுதியில் ஊர்க்காவல்படை வீரராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு ஜோதி (22) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. அனுசுயா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு நடராஜின் மனைவி கோபித்துக் கொண்டு தன் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.இதனால் மனைவி தன்னுடன் இல்லாத ஏக்கத்தில் நடராஜ் அடிக்கடி மனவேதனை அடைந்து புலம்பி வந்ததாக தெரிகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று அவர்களது திருமண நாள் வந்தது. இதற்காக அவர் தனது மனைவியிடம் போன் செய்து திருமண நாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ள பேச ஆசைப்பட்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த நடராஜ் தன் அறைக்குச் சென்று அங்கு மின் விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த நடராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருமண நாளன்று ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.