துப்பாக்கியால் சுட்டு கொன்றாலும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியே தீருவேன்; பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
துப்பாக்கியால் சுட்டு கொன்றாலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடியே தீருவேன் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
விஜயாப்புரா:
பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பண்டிகையை கொண்டாடுவேன்
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டகாசம் செய்கிறார்கள். அங்கு அவர்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். அந்த தலீபான் பயங்கவாதிகளின் நடவடிக்கைகளை ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கண்டிக்காதது ஏன்?. நாட்டில் மோடி இன்று பிரதமராக இல்லாமல் இருந்திருந்தால், தலீபான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்திருப்பார்கள். மோடி நாட்டை பாதுகாக்கிறார்.
தங்களை அறிவாளிகள் என்று கூறிக்கொள்பவர்கள், தலீபான்களை கண்டிக்காமல் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பண்டிகைகளை கொண்டாட அனுமதி இல்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது. நான் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்களை கூட்டி கொண்டாடுவேன். இந்த அரசின் கண்களுக்கு இந்து பண்டிகைகள் மட்டும் தான் தெரிகிறது. துப்பாக்கியால் சுட்டாலும் நான், பண்டிகையை கொண்டாடுவேன்.
கொரோனா பரவல்
துப்பாக்கியால் சுட்டு கொன்றால், பெயரோடு சாவேன். ஆனால் பண்டிகையை கொண்டாடியே தீருவேன். விநாயகர் சதுர்த்தி வரும்போது தான் இந்த அரசுக்கு கொரோனா பரவல் நினைவுக்கு வருகிறது. விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய யாரும் பயப்படக்கூடாது. நான் முதல்-மந்திரியிடம் பேசியுள்ளேன்.
இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.
கர்நாடக பா.ஜனதா அரசுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.