வடமதுரை அருகே விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் படுகாயம்
வடமதுரை அருகே போலீஸ் வேன் மீது லாரி மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டராக பணியாற்றி வருபவர் சிவக்குமார் (வயது 49). இவர் தலைமையில் போலீஸ் ஏட்டு ஈஸ்வரன் (35), போலீஸ்காரர் மலைச்சாமி (30) ஆகியோர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ேநற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வடமதுரை அருகே கொல்லப்பட்டி பிரிவில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அவர்கள் போலீஸ் வேனை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு வாகனங்களை கண்காணித்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக போலீஸ் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த சிவக்குமார், ஈஸ்வரன், மலைச்சாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர், புதுக்கோட்டை காமராஜ்நகரை சேர்ந்த கணேஷ்குமாரை கைது செய்தனர்.