கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலியானார்.

Update: 2021-08-22 19:20 GMT
இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே முனைஞ்சிப்பட்டியை அடுத்த கீழகழுவூர் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 76), விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் கீழகோடன்குளத்தில் உள்ளது. நேற்று முன்தினம் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது. மோட்டார் எப்படி பழுதானது? என்று தேவசகாயம் கிணற்றுப் பகுதியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் யாரும் பார்க்காததால் கிணற்றில் தத்தளித்த தேவசகாயம் பரிதாபமாக உயிரிழந்தார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாத தேவசகாயத்தை அவரது மகன் அந்தோணிபிச்சை மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். பின்னர் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது தேவசகாயம் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

நேற்று காலை நாங்குநேரி தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்