சினிமா தியேட்டர்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்த ஊழியர்கள்
சினிமா தியேட்டர்களை இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க அரசு அனுமதித்துள்து. இதனை முன்னிட்டு நெல்லையில் நேற்று சினிமா தியேட்டர்களை கிருமி நாசினியால் ஊழியர்கள் சுத்தப்படுத்தி தயார் செய்தனர்.
நெல்லை:
சினிமா தியேட்டர்களை இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க அரசு அனுமதித்துள்து. இதனை முன்னிட்டு நெல்லையில் நேற்று சினிமா தியேட்டர்களை கிருமி நாசினியால் ஊழியர்கள் சுத்தப்படுத்தி தயார் செய்தனர்.
தியேட்டர்களை திறக்க அனுமதி
தமிழகத்தில் 2-வது கொரோனா அலை தாக்கத்தால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. இதையொட்டி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது சினிமா தியேட்டர்களையும் மூட உத்தரவிடப்பட்டது.
ஆனால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், சினிமா தியேட்டர்களை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 50 சதவீதம் ரசிகர்களுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
சுத்தப்படுத்தினர்
இதனால் கடந்த 4 மாதங்களாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்களை நேற்று ஊழியர்கள் திறந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு, உடையார்பட்டி, டவுன், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தியேட்டர்களில் நேற்று ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தப்படுத்தினர். இதை தொடர்ந்து இருக்கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் ரசிகர்கள் வந்து செல்லும் பாதையில் பிளீச்சிங் பொடியும் தூவப்பட்டது. இதுதவிர வேலைக்கு வந்திருந்த ஊழியர்களில் தடுப்பூசி போடாமல் இருந்தவர்களை அழைத்துச்சென்று சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட்டனர்.
வழிகாட்டு நெறிமுறைகள்
இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு குறிப்பிட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும். ரசிகர்கள் அருகருகில் உட்காராத வகையில், அதாவது 50 சதவீத ரசிகர்கள் இடைவெளி விட்டு அமர்ந்து படத்தை பார்க்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். இதுதவிர ரசிகர்களுக்கு சானிடைசர் வழங்கி, முக கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்வார்கள்’’ என்றனர்.