வாணியம்பாடியில் குடிபோதையில் வீட்டுக்கு தீ வைத்த மேஸ்திரி
குடிபோதையில் வீட்டுக்கு தீ வைத்த மேஸ்திரி
வாணியம்பாடி
வாணியம்பாடி, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 38), இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். சங்கர் தினமும் குடித்துவிட்டு மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட போது வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையால் மனைவி விஜயலட்சுமியை தாக்கியுள்ளார். இதில் அவர் மண்டை உடைத்துள்ளது. உடனடியாக அப்பகுதி மக்கள் விஜயலட்சுமியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குடிபோதையில் இருந்த சங்கர் அப்பகுதி மக்களிடையேயும் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் வீட்டில் உள்ள பொருட்களை தீவைத்து எரித்துள்ளார். இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, சங்கரை தேடி வருகின்றனர்.