ஆழியாறு அணை நிரம்பியது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஆழியாறு அணை நிரம்பியது. உபரிநீர் வீணாகுவதை தடுக்க குளங்களுக்கு திறக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஆழியாறு அணை நிரம்பியது. உபரிநீர் வீணாகுவதை தடுக்க குளங்களுக்கு திறக்கப்பட்டு உள்ளது.
ஆழியாறு அணை
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் 25-ந் தேதி அணை 100 அடியை எட்டியது.
தொடர்ந்து கடந்த 4-ந் தேதி 110 அடியை எட்டியதால் முதற் கட்டமாகவும், 17-ந் தேதி அணை 115 அடியை எட்டியதால் 2-ம் கட்டமாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிரம்பியது
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் அப்பர் ஆழியாறு அணையில் இருந்து ஆழியாறுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக அணைக்கு வினாடிக்கு 1,214 கன அடி தண்ணீர் வந்தது.
இதன் காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டி நிரம் பியது. இதனால் உபரிநீர் வீணாவதை தடுக்க பொள்ளாச்சி கால் வாய்க்கு 200 கனஅடியும், வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் 48 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தண்ணீர் திறப்பு
அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கால்வாய்கள் வழியாக எலவக்கரை, குப்புச்சிபுதூர் குளங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
மேலும் ஆழியாறில் உள்ள சிறுபுனல் மின் உற்பத்தி நிலையங்கள் இயக்கப்பட்டு 2.50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்தால் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.