அரூரில் துணிகரம் அம்மன் கோவிலின் மேற்கூரையை பிாித்து 30 பவுன் நகை திருட்டு

அரூரில் அம்மன் கோவில் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் 30 பவுன் நகையை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-08-22 16:51 GMT
அரூர்:
அரூரில் அம்மன் கோவில் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் 30 பவுன் நகையை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாரியம்மன் கோவில்
தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகரில் ஊஞ்சல் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாாி பூஜை முடிந்த பின்னர் கோவிலை  பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை அந்த பகுதி மக்கள் கோவில் வழியாக சென்றனர். அப்போது கோவிலின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்தது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கோவில் பூசாாி மற்றும் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவா்கள் விரைந்து வந்து பார்த்தபோது மர்மநபர்கள் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. 
வலைவீச்சு
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் அரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், தர்மபுரியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். 
இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை வலைவீசி தேடி வருகின்றனர். அம்மன் கோவிலின் மேற்கூரையை பிரித்து நகையை மா்ம நபா்கள் திருடிசென்ற இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்