கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை காட்டு யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-08-22 16:32 GMT
கோத்தகிரி

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை காட்டு யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை

கோத்தகிரி மலைப்பகுதியில் இருந்து சமவெளிப்பகுதிக்கு செல்லும் பிரதான சாலையாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. தற்போது கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் நிலவி வருகிறது. 

இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து பலாப்பழங்களை சாப்பிட காட்டு யானைகள் வரதொடங்கியுள்ளன. இவ்வாறு வரும் காட்டு யானைகள் அந்த பகுதியில் முகாமிட்டு வருகின்றன.

இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி குட்டியுடன் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

சாலையின் குறுக்கே நின்ற காட்டு யானை

இந்த நிலையில் நேற்று காலை கோத்திரி-மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் தட்டப்பள்ளம் அருகே ஆண் காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்தது. யானையை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வானங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர்.

இதற்கிடையில், ஒரு சில வாகன ஓட்டிகள் யானை நின்று கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல் ஒலி எழுப்பியப்படி சாலையை கடக்க முயன்றனர். இதனால் மிரண்ட காட்டு யானை தனது தும்பிக்கையை உயர்த்தியவாறு வாகனங்களை விரட்டியது. இதனைக்கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

தொடர்ந்து அந்த காட்டு யானை வாகனங்களை மறித்தப்படி சாலையில் நின்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நீண்ட வரிசையில் நின்றன. இதற்கிடையில், சாலையோரம் நீண்ட நேரம் நின்ற காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இதையடுத்து வாகனங்கள் அங்கிருந்து செல்ல தொடங்கின. இந்த சம்பவத்தால் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலையில் யானை நின்றதை சிலர் ஆபத்தை உணராமல் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் படம் பிடித்தனர். 

தடுப்பு கம்பி அமைக்க வேண்டும்

இந்த சம்பவம் குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அடிக்கடி காட்டு யானைகள் உலா வருகின்றன. இவ்வாறு வரும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகளை தாக்கும் அபாயம் உள்ளது. 

இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனங்களை இயக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து யானைகள் சாலைக்கு வராதவாறு, தடுப்பு கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்