ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஊட்டி நகரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மதியத்திற்கு பின்னர் பெய்ய தொடங்கிய மழை ஒரு மணி நேரம் பலத்த மழையாக பெய்தது. இதனால் சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, கூட்செட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர்.
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-16.5, பர்லியார்-16, கேத்தி-29, எடப்பள்ளி-11, கோத்தகிரி-10, கோடநாடு-11 மழையும் பதிவானது.