பழங்குடியின மக்களுக்கு பயிற்சி
கோத்தகிரி அருகே பழங்குடியின மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்களில் கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை, வானகம்-ஆராய்ச்சி, உலக உணவு பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம், கோத்தகிரி கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் உள் மாவட்ட அளவிலான கண்டுணர்வு சுற்றுலா, பாரம்பரிய விதை பரவலாக்கம் பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலா மேரி தொடங்கி வைத்தார். வேளாண் சந்தை படுத்துதல் துணை இயக்குனர் ஜோஷ்லின் சோபியா, தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பாரம்பரிய விதைகளின் வரலாறும், நமது நாட்டு ரக பயிர்களின் முக்கியத்துவம், தரமான விதை உற்பத்தி நுட்பங்கள், விலை சந்தைப்படுத்துதல், உழவர் உற்பத்தியாளர் கள் உடனான விற்பனை தொடர்பை பலப்படுத்துதல் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஊட்டி விதை பரிசோதனை நிலைய அலுவலர் அன்பழகி விதை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்.
மேலும் நிகழ்ச்சியில் பாரம்பரிய விதைகளின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியையும் ஏராளமான விவசாயிகள் கண்டுகளித்தனர்.