விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்-கலெக்டா் மோகன்
பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று விழுப்புரம் கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வருகிற 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதனால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும், இதை அந்தந்த தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி இருந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும். 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
24 மணி நேரமும் தடுப்பூசி
மேலும் வகுப்பறை, பள்ளி வளாகம், கழிப்பறை, அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றை பள்ளியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்கள் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி மேற்கொள்ளும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.