போடி அருகே கோஷ்டி மோதல் 3 பேர் படுகாயம் 4 பேர் கைது

போடி அருகே நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-22 15:55 GMT
போடி:
போடி அருகே உள்ள சங்கராபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 24). இவர் தனது நண்பர் அலெக்ஸ் பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் இரவில் சக நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அவர்கள் மோட்டார்சைக்கிளில் சத்தம் போட்டு கொண்டு தெருவிற்குள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அதே தெருவை சேர்ந்த முத்துவேல் மகன்கள் பிரபாகரன் (20), கருணாகரன் (18), உறவினர்கள் பாண்டி (21), அஜித் (25) மற்றும் சிலர் சேர்ந்து சாதி பெயரை கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. 
இதை விக்னேஷ்வரனின் தாய் முருகேஸ்வரி(44), தம்பி வினோத்குமார்(20),, அத்தை முருகேஸ்வரி ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவரையொருவர் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் விக்னேஷ்வரன், வினோத்குமார், தாய் முருகேஸ்வரி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
இதுதொடர்பாக போடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து கருணாகரன், பிரபாகரன், பாண்டி, அஜித் ஆகிய 4 பேரை கைது செய்தார்.  

மேலும் செய்திகள்