வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போன் பறிப்பு

திருவள்ளூர் அருகே வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-08-22 12:50 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கும்மிடிப்பூண்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் திவாகர் (வயது 21). நேற்று முன்தினம் திவாகர் தனது மோட்டார் சைக்கிளில் கும்மிடிப்பூண்டியில் இருந்து ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். 

அவர் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகே உள்ள அரிய பாக்கம் காலனி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்த 3 பேர் திடீரென திவாகரை தாக்கினார்கள்.

இதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் மேற்கண்ட 3 பேரும் அவரை அந்த பகுதியில் உள்ள சுடுகாடு அருகே அழைத்து சென்று அவரை தலை மற்றும் உடலில் கத்தியால் வெட்டி அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும், ஒரு செல்போனையும் பறித்துக்கொண்டு இது தொடர்பாக எங்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு தப்பிச்சென்றனர். 

இதில் பலத்த காயத்துடன் கிடந்த திவாகரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரியபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து திவாகர் பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார். 

போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கி அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்து சென்ற 3 பேர் யார் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்