திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடையால் வெறிச்சோடிய கிரிவலப்பாதை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2021-08-22 12:21 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

கிரிவலத்துக்கு தடை

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் மலைச் சுற்றும் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா ஊரடங்கால் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்து வருகிறது. 

இந்த மாதத்துக்கான பவுர்ணமி சனிக்கிழமை இரவு 7.19 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.17 மணிக்கு நிறைவடைந்தது. இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. 

போலீசார் ரோந்து

இதையடுத்து சனிக்கிழமை இரவு கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கிரிவலம் செல்லாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் போலீசார் திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிலர் மாற்றுத் பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர். 

மேலும் கிரிவலப்பாதையில் போலீசார் மூலம் ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டு கிரிவலத்துக்கு தடை குறித்து தொடர்ந்து அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது நாளான நேற்று அதிகாலை பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். கிரிவலப்பாதையில் போலீசார் நேற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பகலில் தனித்தனியாக சிலர் கிரிவலம் சென்றனர். எனினும், கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்