புதர் மண்டிய பாசன கால்வாய்

அமராவதி பாசனக் கால்வாய்கள் பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடப்பதால் பெருமளவு பாசன நீர் வீணாகும் அபாயம் உள்ளது.எனவே 100 நாள் வேலை ஆட்களைக் கொண்டு தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-08-22 12:16 GMT
போடிப்பட்டி
அமராவதி பாசனக் கால்வாய்கள் பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடப்பதால் பெருமளவு பாசன நீர் வீணாகும் அபாயம் உள்ளது.எனவே 100 நாள் வேலை ஆட்களைக் கொண்டு தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகிழ்ச்சியளிக்கும் நீர் இருப்பு
அமராவதி அணையை அடிப்படையாக கொண்டு ஆறு மற்றும் பிரதானக்கால்வாய் மூலம்  55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தற்போது அமராவதி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே அமராவதி அணையின் நீர் இருப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்திலேயே உள்ளது.இதனால் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் பல இடங்களில் பாசனத்துக்குப் பயன்படும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
 
பாசன சபைகள்
அமராவதி பிரதானக் கால்வாயிலிருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள் அனைத்தும் பராமரிக்கப்படாமல் புதர் மண்டியும் புற்கள் முளைத்து காணப்படுகிறது.அத்துடன் பல இடங்களில் இந்த கால்வாயில் குப்பைகளைக் கொட்டியுள்ளனர்.மேலும் கரையிலுள்ள கற்கள் விழுந்து பல இடங்களில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன் விவசாயிகள் பங்களிப்புடன் பொதுப்பணித்துறையினர் இந்த கிளை வாய்க்கால் மற்றும் பகிர்மானக் கால்வாய்களில் பராமரிப்புப்பணிகளை மேற்கொள்வது வழக்கமாகும்.
ஆனால் பாசன சபைகள் செயல்படாத நிலையில் இதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.தற்போது, சில வாரங்களில் அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில் இதுவரை பாசனக் கால்வாய் பராமரிப்புப் பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.இதனால் பெருமளவு நீர் வீணாகும் அபாயம் உள்ளது.அத்துடன் கடைமடை விவசாயிகளுக்குத் தண்ணீர் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும்.
நிதி நெருக்கடி
இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக பொதுப்பணித்துறையினர் உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் மூலம் கிளை வாய்க்கால் மற்றும் பகிர்மானக் கால்வாய்களைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் உள்ள நிலையில் போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

-

மேலும் செய்திகள்