ரிப்பன் மாளிகையில் சென்னை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் - தயாநிதி மாறன் எம்.பி. தலைமையில் நடந்தது
சென்னை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் தயாநிதி மாறன் எம்.பி. தலைமையில் நேற்று நடந்தது.
சென்னை,
சென்னை மாவட்டம் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், குழுவின் தலைவரும், மத்திய சென்னை தொகுதி எம்.பி.யுமான தயாநிதி மாறன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி, மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சென்னை மாவட்ட வளர்ச்சிக்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், மக்கள் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து நிருபர்களிடம் தயாநிதி மாறன் எம்.பி.கூறியதாவது:-
அனைத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் அவரவர் பகுதிகளில் முடிவு பெறாமல் உள்ள திட்டங்களை உடனடியாக முடிக்க வேண்டும். மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசித்தோம். மத்திய அரசு அளிக்கின்ற நிதி குறித்தும், அந்த நிதிகள் உரிய முறையில் செலவழிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆராயப்பட்டது. மின்வாரிய துறையில் பல இடங்களில் மத்திய அரசின் நிதி வரவில்லை என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் எடுத்துரைப்போம். கடந்த 10 ஆண்டுகளின் அவல நிலை ஆட்சியால் தான், தற்போது சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறும்போது, “3 திட்டங்களின் கீழ் சென்னையில் மழை நீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் முடிவு பெறாத திட்டங்களை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் பருவமழைக்கு முன்னதாகவே சென்னையில் மழை நீர் தேங்காத வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.