15 மாவட்டங்களை சேர்ந்த 20 பேருக்கு தொடர்பு
யானை தந்தங்கள் கடத்தல் வழக்கில் 15 மாவட்டங்களை சேர்ந்த 20 பேருக்கு தொடர்பு இருப்பதாக வனத்துறையினர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம், ஆக.22-
யானை தந்தங்கள் கடத்தல் வழக்கில் 15 மாவட்டங்களை சேர்ந்த 20 பேருக்கு தொடர்பு இருப்பதாக வனத்துறையினர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
யானை தந்தங்கள்
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சிலர் யானை தந்தங்களை கடத்தி வந்து விற்பனை செய்ய உள்ளதாக கோவை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தந்தங்கள் இல்லை என்பதும், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் தான் யானை தந்தங்களை விற்க முயற்சி நடப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் தனிப்படையினர் சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் யானை தந்தங்களை விலைக்கு வாங்குவது போல் கடத்தல்காரர்களிடம் பேசினர். அப்போது அவர்களிடம் ஒரு தந்தம் ரூ.10 லட்சம் வீதம் 2 தந்தங்களும் ரூ.20 லட்சத்துக்கு விற்பதாக கடத்தல்காரர்கள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து வாழப்பாடி சுங்கச்சாவடிக்கு யானை தந்தங்களுடன் வந்த கடத்தல்காரர்களை தனிப்படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3 பேருக்கு வலைவீச்சு
விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சசிக்குமார், சேலம் மாவட்டத்தை சேர்ந்த சேட்டு, அருண்குமார், பரத், பிரவீன்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இந்த கடத்தல் தொடர்பாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒரு டாக்டர் மற்றும் மேட்டூரை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் கைதானவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
யானை தந்தங்கள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ளவர்கள் பெரிய நெட்வொர்க் போல் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் ஒரு குறிப்பிட்ட நபருக்கு செல்போன் மூலம் யானை தந்தங்கள் குறித்த புகைப்படங்களை அனுப்பி அதன் மூலம் விற்பனை செய்து வந்துள்ளனர். இதன் மூலம் கோவை, சேலம், கள்ளக்குறிச்சி உள்பட 15 மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் செல்போன் எண்களை சேகரித்து வருகிறோம்.
விசாரணை
தொடர்ந்து கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பதை விசாரணை நடத்த உள்ளோம். மேலும் யானை தந்தங்கள் எங்கிருந்து வாங்கி விற்பனை செய்யப்படுகிறது? என்பன உள்ளிட்டவை தொடர்பாக கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மேலும் சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.