சி.டி.ரவி வீட்டை முற்றுகையிட முயற்சி; காங்கிரசார் 50 பேர் கைது
சிக்கமகளூருவில் சி.டி.ரவியின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சி.டி.ரவியின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
சிக்கமகளூரு:
சி.டி.ரவியின் வீடு
சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சி.டி.ரவி. இவர் பா.ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது தேச தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. அதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சிக்கமகளூருவில் மூடிகெரே ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து அக்கட்சி தொண்டர்கள் சி.டி.ரவி எம்.எல்.ஏ.வின் வீட்டை நோக்கி ஊர்வலம் நடத்தினர். பின்னர் அவர்கள் சி.டி.ரவியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்கள் தொகரிஹங்கல் சர்க்கிள் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
கைது
பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றிச்சென்றனர். இதில் காங்கிரசார் 50 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதுகாப்பு காரணத்திற்காக சி.டி.ரவி வீட்டை சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே இச்சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிடலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் இந்திரா காந்தி சாலையில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் அலுவலகம் முன்பும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று சிக்கமகளூருவில் பரபரப்பு ஏற்பட்டது.