சுடலைமாடசாமி கோவில் உண்டியல் உடைப்பு

ஆரல்வாய்மொழி அருகே சுடலைமாடசாமி கோவில் உண்டியல் உடைத்து விட்டு பூஜை பொருட்களை சூறையாடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-08-21 21:04 GMT
ஆரல்வாய்மொழி, 
ஆரல்வாய்மொழி அருகே சுடலைமாடசாமி கோவில் உண்டியல் உடைத்து விட்டு பூஜை பொருட்களை சூறையாடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
 சுடலைமாடசாமி கோவில்
ஆரல்வாய்மொழி அருகே சோழபுரத்தில் கண்ணாத்து சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பீமநகரியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார். 
இந்தநிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கோவில் திறந்து கிடப்பதை பார்த்து நிர்வாகி வீரபத்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். 
பொருட்கள் சூறை
உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அங்கு இருந்த 2 உண்டியல்கள் மாயமாகி இருந்தன. மேலும், கோவிலில் சாமியின் அங்கி, பூஜை பொருட்கள் அனைத்தும் வளாகத்தில் சிதறி கிடந்தன. இதைபார்த்ததும் நிர்வாகி அதிர்ச்சி அடைந்தார். 
பின்னர், இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 
அப்போது, கோவிலின் பூட்டுகள் அருகில் உள்ள வயல்வெளியில் கிடந்தன. நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்துள்ளனர். அதில் எதிர்பார்த்த பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் முக கவசம், பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை வீசி எறிந்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 
கேமரா காட்சிகள் ஆய்வு
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு ேகமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்