ராமேசுவரம் படகு மீது கப்பலை மோதவிட்டு இலங்கை கடற்படை தாக்குதல்
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் படகு மீது கப்பலை மோதவிட்டு இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது. இதில் 6 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.
ராமேசுவரம்,
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் படகு மீது கப்பலை மோதவிட்டு இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது. இதில் 6 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.
கப்பலை மோதவிட்டனர்
ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 565 விசைப்படகுகளில் சுமார் 2500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் பல்வேறு படகுகள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தன.
அதில் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இருந்த கிங்ஸ்டன், குமார் ஸ்டோபன், மெக்கான்ஸ், சேசு உள்ளிட்ட 6 மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதிக்கு ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர், அந்த விசைப்படகின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் ரோந்து கப்பலை வைத்து படகின் மீது வேகமாக மோதியதாக தெரியவருகிறது.
இதில் விசைப்படகில் பின்பகுதி பலகைகள் உடைந்து சேதம் அடைந்ததுடன், படகின் வீல் ஹவுஸ் கண்ணாடி பகுதிகளும் சேதம் அடைந்தன.
விசாரணை
எனவே படகை அவசரம் அவசரசமாக கரையை நோக்கி திருப்பிய 6 மீனவர்களும் உயிர் தப்பி நேற்று இரவு 7 மணி அளவில் ராமேசுவரத்தில் கரையேறினர். அவர்களிடம் மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து மீனவர் கிங்ஸ்டன் கூறியதாவது:-
இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். மாலை 4.30 மணி அளவில் ஒரு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் எங்கள் படகின் மீது கற்கள் வீசினர். சிறிது நேரத்தில் கப்பலை வைத்து எங்கள் படகின் மீது வேகமாக மோதி விட்டு சென்றனர். இந்த தாக்குதலில் 6 பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினோம். படகில் 2 லட்ச ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டு இருக்கும். இலங்கை கடற்படையின் நடவடிக்கையால், பாரம்பரிய கடல்பகுதியில் நிம்மதியாக எங்களால் மீன்பிடிக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.