ஜோலார்பேட்டை பகுதியில் 3 வீடுகளில் கொள்ளையடித்த 2 பேர் கைது

ஜோலார்பேட்டை பகுதியில் 3 வீடுகளில் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 37½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

Update: 2021-08-21 18:15 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை பகுதியில் 3 வீடுகளில் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 37½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அடுத்தடுத்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்ளிட்டவர்களின் வீடுகளில் தொடர் கொள்ளை நடைபெற்றது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் தலைமையில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் கொண்ட 
தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். 

இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

2 பேரை பிடித்து விசாரணை

அப்போது கையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களுடன் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் திருப்பத்தூரை அடுத்த பெரியகுனிச்சி, அசோக் நகரை சேர்ந்த மனோஜ் (வயது 30), குனிச்சிமோட்டூர் காலனியை சேர்ந்த சரத்குமார் (29) என்பதும், இவர்கள் கந்திலி அருகே உள்ள சு.பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் வீட்டிலும், பாச்சல் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடேசன் என்பவர் வீட்டிலும், பசுமை நகர் பகுதியை சேர்ந்த சிவகாமி என்பவர் வீட்டிலும் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடித்தது தெரியவந்தது. 
37½ பவுன் நகைகள் மீட்பு

இதனையடுத்து அவர்களிடம் இருந்து 3 வீடுகளில் கொள்ளையடித்த 37½ பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் வெங்கடேசன் வீட்டில் கொள்ளையடித்த ரூ.1  லட்சத்து 60 ஆயிரத்தை செலவழித்து விட்டதாக அவர்கள் கூறினர். 

இதனையடுத்து மனோஜ் மற்றும் சரத்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
மேலும் இவர்கள் இருவரும் பகல் நேரங்களில் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிச் செல்வது தொழிலாக செய்து வந்துள்ளனர். இதில் மனோஜ் மீது திருப்பத்தூர், ஈரோடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 22 திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்