முக கவசம் அணியாவிட்டால் ரேஷன் பொருட்கள் கிடையாது கலெக்டர் எச்சரிக்கை

முக கவசம் அணியாமல் வந்தால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2021-08-21 16:58 GMT

தேனி:
பெரியகுளம் நகரில் உள்ள 3 ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு விவரங்கள் சரியாக உள்ளதா? விற்பனை முனைய கருவிகளில் முறையாக பதிவு செய்யப்பட்டு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறதா? என பார்வையிட்டார்.
பொருட்கள் வாங்க வந்த மக்களிடம் ரேஷன் பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என்றும், அரசு வழங்கிய கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு கிடைக்கப் பெற்றதா? என்று கேட்டறிந்தார். பின்னர் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யக்கூடாது என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
முக கவசம்
இந்த ஆய்வு குறித்து கலெக்டர் முரளிதரன் கூறுகையில், "கொரோனா வைரஸ் 3-வது அலை பரவாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். ரேஷன் கடைகளுக்கு முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் என்றும், முககவசம் அணியாமல் வந்தால் ரேஷன் பொருட்கள் வழங்கக்கூடாது என்றும் அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். எந்தவித முறைகேடுக்கும் இடம் கொடுக்காமல் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும்" என்றார்.
கலெக்டர் ஆய்வு செய்த போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டரிடம் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். பின்னர், தேவதானப்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்களை கலெக்டர் நிறுத்தி பயணிகள் முக கவசம் அணிந்து பயணம் செய்கிறார்களா? என ஆய்வு செய்தார். முக கவசம் அணியாத பயணிகளுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் செய்திகள்