உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 119 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்
கிருஷ்ணகிரியில் உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் 119 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 119 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 18 வயதிற்கு குறைவாக உள்ள கிருஷ்ணகிரி வட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து பேசினார். இந்த முகாமில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவன், தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி மற்றும் டாக்டர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் கலெக்டர் பேசுகையில், கிருஷ்ணகிரி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகிற 25-ந்தேதி போச்சம்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்த முகாம் நடக்கிறது. செப்டம்பர் 1-ந் தேதி அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கும், செப்டம்பர் 8-ந் தேதி ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கும் முகாம் நடைபெறும்.
நலத்திட்ட உதவிகள்
இந்த முகாமில் ஏற்கனவே உதவித்தொகை கோரி வரப்பெற்ற 263 மனுக்களில் 18 வயதிற்கு குறைவாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ குழு மூலம் பயனாளிகளை தேர்வு செய்து, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில் எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, கண் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து, தகுதியான நபர்களை தேர்வு செய்து, பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் வரப்பெற்ற மனுக்கள் மீது தீர்வு காணும் விதமாக இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட 3 சக்கர பெட்ரோல் வாகனம் ஒருவருக்கும், 100 பேருக்கு தையல் எந்திரங்களும், 10 பேருக்கு ஊன்றுகோல்களும், 8 பேருக்கு உருபெருக்கியும் என மொத்தம் 119 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்து 700 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.