சிறுசேரி அருகே ரூ.20 கோடி திமிங்கல உமிழ்நீர் பதுக்கிய 9 பேர் கைது

சிறுசேரி அருகே ரூ.20 கோடி திமிங்கல உமிழ்நீர் பதுக்கிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-21 14:16 GMT
திருப்போரூர், 

செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி அருகே திமிங்கல உமிழ்நீர் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் திருப்போரூர் வனசரக அலுவலர் கல்யாண் தலைமையில், சென்னை வனசரக அலுவலர் ராஜேஷ், வனவர்கள் பிரசாந்த், ராஜன் பாபு, செல்வராஜ், குமரேசன். வனக்காப்பாளர் தீனதயாளன், சதாம் உசேன், மதன்குமார், பாலகணேஷ், சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாறுவேடத்தில் சென்று ஆய்வு நடத்தினர்.

திமிங்கல உமிழ்நீர் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்பட்ட 3 பேரிடம் தங்களுக்கு திமிங்கல உமிழ்நீர் தேவைப்படுவதாக கூறினர். அவர்கள் 3 கிலோ திமிங்கல உமிழ்நீரை காட்டினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரத்தை அடுத்த மதன் பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மோகன் தாஸ் (வயது 34), கடலூர் மாவட்டம் சிதம்பரம் பரதூர்சாவடி பகுதியை சேர்ந்த அருள்முருகன் ( 30), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கண்ணம்பட்டி கிராமத்தை விக்னேஷ் (29) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காஞ்சீபுரம், தாம்பரம், சென்னை, நெற்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக வைத்திருந்தவர்கள் மேலக்கோட்டையூர் பகுதியில் பதுக்கி வைத்தது தெரியவந்து.

அவ்வாறு பதுக்கி வைத்ததாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே மேபேடு பகுதியை சேர்ந்த டேனியல் (53), காஞ்சீபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஆதித்யா (43), பெங்களூருவை சேர்ந்த சதீஷ்குமார் (50), சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த முருகன் (48), காஞ்சீபுரம் அருகே தண்டலம் பள்ளி தெருவை சேர்ந்த மோகன் (50), அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜன் (51) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திமிங்கல உமிழ்நீர் கைப்பற்றப்பட்டது. மொத்தத்தில் 13 கிலோ திமிங்கல உமிழ்நீரை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.20 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பயன்படுத்திய ஒரு கார், 2 இருசக்கர வாகனம், உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டது

இவை திமிங்கலத்தின் செரிமான அமைப்பிலிருந்து உருவாவதாக கூறப்படுகிறது. பொதுவாக, திமிங்கலம் தனது இரையை வேட்டையாடும்போது இந்த வகையான மெழுகு போன்ற திரவத்தை பயன்படுத்துகிறது. திமிங்கலம் தனக்கு பிடித்த கணவாய் மீன்கள், ஆக்டோபஸ்களை வேட்டையாடி விழுங்கும்போது, அந்த மீன்களின் கூரிய உறுப்புகள், முட்கள் மற்றும் பற்களால் திமிங்கலத்தின் உள் உறுப்புகளில் காயம் ஏற்படவும், செரிமான பிரச்சினை ஏற்படவும் மிக அதிக அளவு வாய்ப்பிருக்கிறது. அதை தடுப்பதற்காக இயற்கையிலேயே கொடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு கவசம்தான் இந்த மெழுகுபோன்ற திரவம்.

உணவு உட்கொண்ட பின்னர், ஜீரணமாகாத உணவு மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகின்றன. கடலில் மிதக்கும் அவை சூரிய ஒளி மற்றும் கடலின் உப்பு நீரால் கறுப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிற அம்பர்கிரிஸ்சாக உருப்பெருகின்றன. இறுதியாக அவை கடற்கரையோரங்களிலும், மீன்பிடி வலைகளிலும் மீட்டெடுக்கப்படுகின்றன. இவை உலக அளவில் உயர்ரக வாசனை திரவியங்கள் தயாரிக்கும் மூலப்பொருள்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி, விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்கும் உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது.

அம்பர்கிரிஸ் என்று அழைக்கப்படும் இவை சர்வதேச அளவில் 1 கிலோ ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மதிப்புக்காகவே திமிங்கலங்கள் அதிக அளவு வேட்டையாடப்படுகின்றன.

மேலும் செய்திகள்