குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் மேளா; கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் மேளா நடக்கிறது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-08-21 11:53 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் தூத்துக்குடி கிளை அலுவலகத்தில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தொழில் கடன் மேளா நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில் முதலீட்டு கழகம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டுவரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.இக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முக படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
தற்போது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே போல்பேட்டையில் உள்ள என்.பி.எஸ். வணிக வளாகத்தில் இருக்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தூத்துக்குடி கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தொழில் கடன் மேளா கடந்த 18-ந்தேதி முதல் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

கடன் மேளா

இந்த சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவிகித சலுகை அளிக்கப்படும். என்.இ.இ.டி.எஸ் திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்