ஆப்கானில் 17 கன்னடர்கள் சிக்கி தவிப்பு; பாதுகாப்பாக மீட்க கர்நாடக அரசு நடவடிக்கை
தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் 17 கன்னடர்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பாக மீட்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரு:
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் அந்த நாட்டை கைப்பற்றி உள்ளன. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானை ‘இஸ்லாமிய அமீரகம்’ என்று தலீபான்கள் பெயர் மாற்றி பிரகடனம் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை பிடித்துள்ளதால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.
மேலும் அந்த நாட்டில் இருந்து மக்கள் வேறு நாடுகளுக்கு வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரையில் பலர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பி உள்ளனர்.
20 பேர் சிக்கி தவிப்பு
அதேபோல் கர்நாடகத்தைச் சேர்ந்த 20 பேர் ஆப்கானிஸ்தானில் சிக்கினர். அவர்களை மீட்க ஐ.பி.எஸ். அதிகாரி உமேஷ் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 3 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பி இருக்கிறார்கள். அவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் பகுதியைச் சேர்ந்த மெல்வின் மொந்தரோ, பண்ட்வால் தாலுகா சித்தகட்டே கிராமத்தைச் சேர்ந்த ஜெரோம் சிக்வீர் மற்றும் மங்களூரு டவுன் பகுதியைச் சேர்ந்த சிஸ்டர் தெரசா ஆகியோர் ஆவர். இதில் மெல்வின் மொந்தரோ இந்திய ராணுவ விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளார். அவர் நேட்டோ படை முகாமில் உள்ள ஆஸ்பத்திரியில் மின்சார சேவை பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஜெரோம் சிக்வீர் காபூல் நகரில் உள்ள சர்வதேச தொண்டு நிறுவனத்திலும், சிஸ்டர் தெரசா காபூலில் இயங்கி வந்த இத்தாலியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட மற்றொரு தொண்டு நிறுவனத்திலும் அதிகாரிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள்...
இவர்கள் தவிர மேலும் 17 பேர் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதுபற்றி நாடு திரும்பிய 3 பேரும் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானில் நாங்கள் 3 பேர் உள்பட 20 கன்னடர்கள் சிக்கி தவித்தோம். நாங்கள் 3 பேரும் காப்பாற்றப்பட்டு நாடு திரும்பி விட்டோம். இன்னும் 17 பேர் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்கள் வேறு, வேறு பகுதிகளில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள கன்னடர்களின் நிலை குறித்து கர்நாடக அரசின் கண்காணிப்பு அதிகாரி உமேஷ்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-
எங்களுக் கிடைத்துள்ள தகவலின்படி ஆப்கானிஸ்தனில் கன்னடர்கள் 7 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களை பத்திரமாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று காபூலுக்கு சென்றுள்ளது. அங்கு பல்வேறு நாட்டு விமானங்கள் வரிசையில் உள்ளதால், இந்திய விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கன்னடர்கள் 7 பேர் உள்பட இந்தியர்களை அழைத்து கொண்டு இன்று (சனிக்கிழமை) காலைக்குள் அந்த விமானம் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு உமேஷ்குமார் கூறினார்.