கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டில் 30½ கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி; மத்திய மந்திரி ஷோபா பேட்டி

நாட்டில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் 30½ கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா கூறினார்.

Update: 2021-08-20 21:31 GMT
பெங்களூரு:

  மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இயற்கை விவசாயம்

  நாட்டில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் 30½ கோடி டன் உணவு தானியங்களும், 32.60 கோடி டன் தோட்டக்கலை பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டன. உணவு உற்பத்தியில் இது ஒரு சாதனை ஆகும். உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் திட்டங்களால் இது சாத்தியமாகியுள்ளது. உணவு தானியங்கள் ஏற்றுமதியில் இந்தியா தற்போது 9-வது இடத்தில் உள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்கு 14 சதவீதமாக இருந்தது.

  கடந்த 7 ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் இது 20.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. விவசாயத்துறையை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமரின் கிருஷி சம்மான் திட்டத்தில் இதுவரை 21 கோடி விவசாயிகளுக்கு ரூ.1.57 லட்சம் கோடி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்திற்கு அதிக ஊக்கம் அளிக்கப்படுகிறது.

விவசாய குழுக்கள்

  சொட்டுநீர் பாசன முறையில் கர்நாடகம் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. தேங்காய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பதப்படுத்தப்பட்ட தேங்காய் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். டிராக்டர், ட்ரில்லர் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயத்தில் போதிய வருமானம் இல்லை என்று கருதி விவசாயிகள் நகரங்களை நோக்கி வருகிறார்கள்.

  விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைளையும் எடுத்து வருகிறது. நடப்பு ஆண்டில் விவசாயத்துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 10 ஆயிரம் விவசாய குழுக்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழுக்களுக்கு கடன் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

சிறுதானியங்கள் சாகுபடி

  மேலும் விவசாயத்துறையின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தரிசு நிலத்தில் சிறுதானியங்கள் சாகுபடி செய்ய ஊக்கம் அளிக்கப்படும். எதிர்க்கட்சிகளின் செயல்களால் ஜனநாயகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் மக்கள் ஆசி யாத்திரையை மேற்கொண்டோம். 

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நாடாளுமன்றத்தை நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு மத்திய இணை மந்திரி பதவியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
  இவ்வாறு ஷோபா கூறினார்.

மேலும் செய்திகள்