ஏற்காட்டில் பரபரப்பு ஒரே நேரத்தில் 2 தடுப்பூசி போட்டது போன்று சான்றிதழ் பொதுமக்கள் அதிர்ச்சி
ஏற்காட்டில் ஒரே நேரத்தில் 2 தடுப்பூசி போட்டது போன்று சான்றிதழ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்காடு
கொரோனா தடுப்பூசி
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அப்படி தடுப்பூசி போடும் போது தடுப்பூசி போடுவோர் தங்களது ஆதார் அட்டை நகல், செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும்.
அப்போது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வரும். அந்த குறுந்தகவலை வைத்து, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த சான்றிதழில் முதல் தவணை தடுப்பூசி போட்டதற்கான தேதியும், 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கான தேதியும் இருக்கும்.
ஒரே தேதியில் 2 தடுப்பூசிகள்
ஆனால் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள் சிலர் தங்களது சான்றிதழை பதிவிறக்கம் செய்தனர். அந்த சான்றிதழில் முதல் தவணை தடுப்பூசி போட்ட தேதியும், 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டிய தேதியும் ஒரே தேதியாக இருந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார ஊழியர்கள், அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரி தாம்சன் கூறுகையில், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் போது, தடுப்பூசி போட்ட தேதி, செல்போன் எண், ஆதார் எண் ஆகியவற்றை அன்றே ஆன்லைனில் பதிவு செய்து விடுவோம். அதேநேரத்தில் ஒரே தேதியில் 2 ஊசிகள் போட்டதாக ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. ஏதோ சர்வர் பிரச்சினையால் இந்த குளறுபடி நடந்து இருக்கலாம் என நினைக்கிறேன். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுகு்கு தகவல் தெரிவித்துள்ளோம். இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.