பெங்களூருவில் வீடு புகுந்து வயதான தம்பதி படுகொலை

பெங்களூருவில் வீடு புகுந்து வயதான தம்பதியை கத்தியால் குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2021-08-20 21:13 GMT
பெங்களூரு:

வயதான தம்பதி கொலை

  பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காசிநகரில் வசித்து வந்தவர் சாந்தராஜ்(வயது 65). இவரது மனைவி பிரேமலதா(61). பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தில்(பி.எம்.டி.சி) மெக்கானிக்காக பணியாற்றி சாந்தராஜ் ஓய்வு பெற்றிருந்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருந்தனர். தற்போது சாந்தராஜ், பிரேமலதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்கள்.

  இந்த நிலையில், நேற்று மதியம் சாந்தராஜின் வீட்டுக்கு வந்த மர்மநபர்கள், சாந்தராஜ் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவை கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில், பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்கள். உடனே அங்கிருந்து மா்மநபர்கள் தப்பி சென்று விட்டார்கள். இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் குமாரசாமி லே-அவுட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

நன்கு தெரிந்த நபர்களே...

  உடனே சம்பவ இடத்திற்கு குமாரசாமி லே-அவுட் போலீசார் விரைந்து வந்து தம்பதியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டேவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது தம்பதியின் கழுத்தை அறுத்தும், அவர்களை சரமாரியாக கத்தியால் குத்தியும் மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

  மேலும் சாந்தராஜ், அவரது மனைவியை, அவர்களுக்கு தெரிந்த நபர்களே கொலை செய்திருப்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். மா்மநபர்கள் தம்பதியுடன் அமர்ந்து பேசியது மற்றும் வீட்டில் இருந்து காபி குடித்ததற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதன் காரணமாக சாந்தராஜிக்கு நன்கு தெரிந்த நபர்களே இந்த கொலையை செய்திருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டே நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வயதான தம்பதியை மர்மநபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார்கள். நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த தம்பதி வீட்டில் தனியாக இருப்பதை நன்கு அறிந்து அவர்களுக்கு தெரிந்த நபர்களே இந்த கொலையை செய்திருக்கிறார்கள். கொலையாளிகள் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.

  இதற்கிடையில், கொலையாளிகளை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்