இடஒதுக்கீடு குறித்து பேச பா.ஜனதாவினருக்கு தகுதி இல்லை; சித்தராமையா தாக்கு
இடஒதுக்கீடு குறித்து பேச பா.ஜனதாவினருக்கு தகுதி இல்லை என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு:
மக்கள்தொகை கணக்கெடுப்பு
கர்நாடக காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, முன்னாள் முதல்-மந்திரி தேவராஜ் அர்ஸ் பிறந்த நாள் விழா பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த அறிக்கை என்னால் தயாரிக்கப்பட்டதாக குமாரசாமி சொல்கிறார். இது அப்பட்டமான பொய். நான் ஆட்சியில் இருந்தவரை எனது கைக்கு அந்த அறிக்கை வரவில்லை. கூட்டணி ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரியாக இருந்த புட்டரங்கஷெட்டியிடம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அங்கீகரிக்குமாறு கூறினேன்.
அனுமதி அளிக்கவில்லை
ஆனால் இதற்கு முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமி அனுமதி அளிக்கவில்லை. ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த நான், சண்டை வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அனைத்து சாதிகளின் கல்வி-பொருளாதார நிலைகள் குறித்து அறியவே இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சாதியை மனதில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படவில்லை.
ஆசிரியர்கள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை இந்த கர்நாடகத்தின் சொத்து. அரசியல் உள்பட அனைத்து அதிகாரங்களும் சமமாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். அதற்கு சாதி வாரியான புள்ளி விவரங்கள் தேவை. பா.ஜனதாவினர் பொய்களை சொல்லியே மக்களை திசை திருப்புகிறார்கள். வரலாற்றை திருத்துவதிலும், பொய் பேசுவதிலும் பா.ஜனதாவினர் நிபுணர்கள்.
மண்டல் கமிஷன்
உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து பா.ஜனதாவை சேர்ந்த மறைந்த ரமாஜோய்ஸ் எம்.பி. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பா.ஜனதா தலைவர்கள் எப்போதாவது இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார்களா?.
மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியபோது அதற்கு எதிராக பள்ளி குழந்தைகளை பா.ஜனதாவினர் போராட தூண்டினர். அதனால் இட ஒதுக்கீடு குறித்து பேச பா.ஜனதாவினருக்கு தகுதி இல்லை. பா.ஜனதாவினரிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.