மக்களிடம் கருத்து கேட்டுதான் மீன்வள மசோதா நிறைவேற்றப்படும்-மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
மக்களிடம் கருத்துகளை கேட்ட பிறகுதான் மீன்வள மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
நெல்லை:
மக்களிடம் கருத்துகளை கேட்ட பிறகுதான் மீன்வள மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
மீன்வள மசோதா
நெல்லையில் மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீன்வள மசோதா-2021 சரத்துகளை மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறுவோம். மக்களின் கருத்துகளை கேட்ட பிறகுதான் மசோதா நிறைவேற்றப்படும். பாராம்பரிய மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
தற்போது உள்ள தமிழக அரசின் மீன்பிடி சட்டத்தின்படி, அனுமதி இல்லாமல் 12 கடல் மைலில் பிடிக்கப்படும் மீன்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் மீன்வள மசோதாவில் ரூ.1,000 மட்டுமே அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மீனவர் நலன் பாதுகாப்பு
உள்நாட்டு மீனவர்களின் நலன்களை பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீன்வள மசோதாவை பற்றி பொய் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன. 12 முதல் 200 கடல் மைல் தொலைவில் உள்ள இடத்தில் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் வந்து மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
மீனவர்களின் விசைப்படகுகளில் விசைத்திறன் அதிகரிக்கப்பட்டு அப்பகுதியில் மீன் பிடிக்க வழிவகை செய்யப்படும்.
ரூ.20 ஆயிரம் கோடி
மத்திய அரசு மீனவர்கள் நலனுக்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. மீன்பிடி விசைப்படகுகளுக்கு 80 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கடற்பாசி மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மீனவர்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கான விசைப்படகுகளின் கட்டுமான நிறுவனம் கொச்சியில் இருப்பது போல், தமிழகத்தில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை
இதைத்தொடர்ந்து பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்த படைத்தளபதி ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினத்தை கடைபிடிக்கும் இந்த வேளையில் மத்திய அரசு சார்பில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட மத்திய மந்திரி மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டால் நாட்டின் அனைத்து பகுதிக்கும் ஒண்டிவீரன் புகழ் சென்று சேரும். அதோடு மட்டுமல்லாமல் ஒண்டிவீரன் சிலையை மாநில தலைநகரிலும் நிறுவ வேண்டும்.
மேலும், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தை சுற்றி வரலாற்று புகைப்படங்கள் அமைப்பதோடு, டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் தொடுதிரை அமைக்கப்பட்டு அதன்மூலம் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த 100 நாட்களில், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சிகள் மீது காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வின் 100 நாள் ஆட்சி பற்றி பார்த்தால், கொஞ்சம் இனிப்பு, அதிக கசப்பு, அதைவிட அதிக காரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரதியார் வகுப்பறை
முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் நெல்லை சந்திப்பில் பாரதியார் படித்த ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளிக்கு சென்றனர். அங்கு பாரதியார், வ.உ.சி. ஆகியோர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அவர்கள் அமர்ந்து பாடம் படித்த இருக்கையில் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தின முத்திரையை அவர்கள் வெளியிட்டனர்.
பின்னர் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தனர். அதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.