கள்ளக்காதல் விவகாரத்தில் பழிக்கு பழியாக வாலிபரை கொன்ற 5 பேர் கைது
தாராபுரம் அருகே வாலிபர் கொலை சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாராபுரம்
தாராபுரம் அருகே வாலிபர் கொலை சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விருதுநகர் வாலிபர்
விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி சொட்டையன் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் விக்கி என்ற விக்னேஷ் (வயது 23). இவர் கடந்த 18-ந் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கத்தி மற்றும் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு மேற்பார்வையில் தாராபுரம், மூலனூர் மற்றும் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே இந்த கொலை தொடர்பாக நேற்று முன்தினம் கே.டி.மணி மற்றும் பாஸ்கர் ஆகிய 2 பேரும் வாடிப்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
5 பேர் கைது
இதைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்டம் கே.பரமத்தி குப்பம் கிரசர்மேடு பகுதியை சேர்ந்த பழனிகுமார் மகன் சுகன்ராஜ் (23), விருதுநகர் அல்லம்பட்டி கவுரவநாயுடு தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் கருப்பு என்கிற கருப்புசாமி (20), சேலம் வாழப்பாடி அனுப்பூர்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாது என்பவரது மகன் மனோஜ் என்கிற மனோகரன் (22), விருதுநகர் பாண்டியன்நகர் காந்திநகரை சேர்ந்த தர்மர் மகன் செல்வம் என்கிற திருவளர் செல்வம் (24) மற்றும் 17 வயது சிறுவன் என மொத்தம் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கொலையில் மூளையாக செயல்பட்ட சுகன்ராஜ் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நான் பல்வேறு ஊர்களில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தேன். என்னுடன் விக்னேஷ் மற்றும் அவருடைய அண்ணன் முத்துப்பாண்டி ஆகியோரும் கட்டிட வேலை செய்தனர். அப்போது எனது சித்தியுடன் முத்துப்பாண்டிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை நான் பலமுறை கண்டித்தேன். ஆனால் முத்துப்பாண்டி எனது சித்தியுடனான கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
காலை வெட்டினார்
இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையில் முத்துப்பாண்டி எனது ஒரு காலை வெட்டி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் முத்துப்பாண்டியை கொலை செய்ய காத்திருந்தேன். இதற்கிடையில் சிறையில் இருந்து ஜாமீனில் வௌியே வந்த முத்துப்பாண்டியை 2018-ம் ஆண்டு கொலை செய்தோம்.
இந்த கொலை வழக்கில் நான் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தோம். இதில் ஜாமீனில் வௌியே வந்த எனது ஆட்கள் 2 பேரை பழிக்கு பழியாக முத்துப்பாண்டியின் தம்பி விக்னேஷ் கொலை செய்தார்.
தீர்த்துக்கட்டினோம்
எனவே விக்னேசை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அவரும் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்து வந்தார். விக்னேசை கொலை செய்யும் திட்டத்தை வாழப்பாடியை சேர்ந்த எனது நண்பர் மனோஜிடம் தெரிவித்தேன். அவரும் சரி என ஒத்துக்கொண்டார். இதையடுத்து தாராபுரம் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்த மனோஜ், அங்கு கட்டிட வேலை இருப்பதாகவும், வந்தால் உடனே வேலை கிடைக்கும் என்றும் விக்னேசை தொடர்பு கொண்டு கூறினார். அவரும் உடனே பஸ்சில் தாராபுரம் வந்தார்.
பின்னர் தாராபுரம் பகுதியில் ஒரு காரில் நான் காத்திருந்தேன். ஒரு மோட்டார் சைக்கிளில் எனது கோஷ்டியை சேர்ந்த செல்வம், கருப்புசாமி உள்ளிட்ட 3 பேர் தயாராக இருந்தனர்.
மது அருந்தினோம்
தாராபுரத்தில் விக்னேஷ் வந்து இறங்கியதும், அவரை மனோஜ் மற்றொரு மோட்டார் சைக்கிளில் தாராபுரம்-உடுமலை சாலையில் திருமலையம்பாளையம் பகுதிக்கு அழைத்து வந்தார். நாங்களும் பின் தொடர்ந்து சென்றோம். அங்கு வீட்டுமனைகள் விற்பனை செய்யும் பகுதியில் அனைவரும் அமர்ந்து மது அருந்தினோம். பின்னர் விக்னேசை கத்தி மற்றும் வீச்சரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி விட்டோம்.
இவ்வாறு சுகன்ராஜ் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.