காளான் விலை உயர்வு

குன்னூர் பகுதியில் காளான் விலை உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2021-08-20 18:03 GMT
குன்னூர்,

குன்னூர் பகுதியில் காளான் விலை உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

காளான் சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் காளான் சாகுபடியிலும் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி குன்னூர், கோத்தகிரி, எல்ல நள்ளி, அரக்காடு போன்ற பகுதிகளில் காளான் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.

பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் மொட்டு காளான் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. மாவட்டத்தின் காலநிலை மொட்டு காளான் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பதால், அவை இயற்கையாகவே வளர்கிறது. வளர்ந்த காளானை 5 நாட்கள் வரை வைக்கலாம். சாகுபடி செய்த 40 நாட்களில் வளரும் தன்மை கொண்டது, காளான் ஆகும். 

வளர்ச்சி அதிகம்

மழைக்காலத்தில் காளான் வளர்ச்சி அதிகரித்து இருக்கும். கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால், காளான் வளர்ச்சி குறைவாக இருக்கும். மேலும் நோய் பாதிப்பும் ஏற்படுவதால், மகசூல் குறைவாக இருக்கும்.

தற்போது சுப முகூர்த்த நாட்கள் மற்றும் ஓணம் பண்டிகை என விஷேச நாட்களாக இருப்பதால் காளானுக்கு நுகர்வு அதிகரித்து உள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான சிறு விவசாயிகள் காளான் சாகுபடியில் ஈடுபடவில்லை. இதனால் காளான் உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால் காளான் விலை உயர்ந்து வருகிறது. அதாவது தற்போது கிலோவுக்கு 160 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதனால் காளான் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்