அனைத்து பள்ளிகளையும் உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும்

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பள்ளிகளையும் உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-08-20 18:02 GMT
விழுப்புரம், 

கொரோனா காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடும்போது, அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதற்கான முன்னேற்பாடு பணிகளில் பள்ளிக்கல்வித்துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு பள்ளிகள் திறப்பையொட்டி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
இந்நிலையில் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறப்பது தொடர்பாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளிகளை தூய்மைப்படுத்த

10-ம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களும் 11-ம் வகுப்பில் அல்லது ஐ.டி.ஐ.யில் சேர்ந்து விட்டார்களா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும், 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் இந்த வருடம் மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள். இம்மாணவர்களுக்கு ஆங்கிலவழி பாடப்புத்தகம் வழங்கப்பட்டுள்ளனவா? என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை விரைவில் பள்ளிகள் திறக்க உள்ளதால் அதற்கு ஏற்றாற்போல் பள்ளி வளாகம், கழிவறை, வகுப்பறை, அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றை பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். 3-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒப்படைப்பு பணி (அசென்மெண்ட்) வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் ஒப்படைப்பு பணியை செய்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். தினமும் ஆசிரியர்களின் வருகை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

திறன் வளர் பயிற்சி

மேலும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். இணையதளம் வழியாக அனைத்து முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டு பயிற்சி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் விழுப்புரம் கிருஷ்ணன், திண்டிவனம் சாந்தி, செஞ்சி அமுதா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சேவியர்சந்திரகுமார், காளிதாஸ், கண்காணிப்பாளர்கள் கோகுலகண்ணன், வெங்கடேசபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்