விபத்துகளை தடுக்க புதிய பாலம் கட்டப்படுமா?

தேவாலா அட்டியில் விபத்துகளை தடுக்க புதிய பாலம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2021-08-20 17:54 GMT
கூடலூர்,

தேவாலா அட்டியில் விபத்துகளை தடுக்க புதிய பாலம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பாலம் உடைந்தது

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். அதில் கடந்த ஆண்டு தொடர்ந்து கனமழை பெய்தது. அப்போது பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனால் கூடலூர் அருகே நாடுகாணி பெட்ரோல் பங்க் அருகில் இருந்து தேவாலா அட்டிக்கு செல்லும் வழியில் ஆற்று வாய்க்காலுக்கு குறுக்கே சிமெண்டு பாலம் உடைந்து விழுந்தது. இதன் காரணமாக நாடுகாணியில் இருந்து தேவாலா அட்டிக்கு வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து தடைபட்டது. 

மரக்கட்டைகளை கொண்டு...

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் மரக்கட்டைகளை கொண்டு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சிறிய ரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது.

ஆனால் உடைந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக புதிய சிமெண்டு பாலம் இதுவரை கட்டப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

ஆட்டோ கவிழ்ந்தது

இந்த நிலையில் மரக்கட்டைகளால் அமைத்த தற்காலிக பாலத்தில் சிறிய ரக வாகனங்கள் செல்லும்போது விபத்து நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பொதுமக்களிடம் மீன்களை விற்பனை செய்வதற்காக சென்ற சரக்கு ஆட்டோ தற்காலிக பாலத்தில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்தது. 

மேலும் மீன்களும் நாசமானது. உடனே அந்த வழியாக வந்தவர்கள் விரைந்து செயல்பட்டு ஆட்டோவுக்குள் சிக்கி இருந்த டிரைவரை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. தொடர்ந்து சரக்கு ஆட்டோ மீட்கப்பட்டது.

இங்கு ஏற்கனவே கடந்த வாரம் மற்றொரு வாகனம் விபத்தில் சிக்கியது. தொடர்ந்து வாகன விபத்துகள் நடைபெறுவதால், விரைந்து புதிய சிமெண்டு பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்