திருமணம் நிச்சயித்த பெண்ணின் வீட்டு முன் தற்கொலைக்கு முயன்ற கேரள வாலிபர்
திருமணம் நிச்சயித்த பெண்ணின் வீட்டு முன் தற்கொலைக்கு முயன்ற கேரள வாலிபர்.
கோவை,
கேரள மாநிலம் பாலையனூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 23). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது உடன் படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அஜித்திற்கு அந்த பெண்ணின் மீது ஒரு தலைக் காதல் ஏற்பட்டது. ஆனால் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் அவரை காதலிக்க மறுத்து உள்ளார்.
இருப்பினும் அஜித் தொடர்ந்து அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். அவர்கள் அஜித்தை கண்டித்து உள்ளனர். இதனிடையே அஜித் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் வரன் பார்க்க தொடங்கினர்.
இதையடுத்து அந்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, நேற்று திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அஜித்தால், திருமணத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால், அந்த இளம்பெண்ணை கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்க வைத்து உள்ளனர். இளம்பெண்ணின் திருமணம் குறித்து தகவல் அறிந்த அஜித் வெளிநாட்டில் இருந்து கேரளா வந்து உள்ளார்.
பின்னர் அந்த இளம்பெண் கோவையில் இருப்பதை அறிந்து கொண்ட அஜித், நேற்று முன்தினம் இரவு அந்த பெண் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றார். மேலும் இளம்பெண்ணை வெளியே வரக்கூறி தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கிருந்த இளம்பெண்ணின், பெரியம்மா அவரை தடுத்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அஜித் தான் கொண்டு வந்திருந்த கத்தியை திடீரென எடுத்தார். அந்த கத்தியால் தன்னைத்தானே வயிறு மற்றும் கையில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை தடுத்த அந்த இளம் பெண்ணின் பெரியம்மாவுக்கும் கத்திக்குத்தில் லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தலைக்காதல் நிறைவேறாததால் தான் காதலித்த பெண் தங்கியிருந்த வீட்டின் முன்பு, தனக்கு தானே கேரள வாலிபர் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.