மொபட் மீது லாரி மோதி பெண் பலி

கரூர் அருகே மொபட் மீது லாரி மோதி பெண் பரிதாபமாக இறந்தார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-08-20 17:44 GMT
கரூர்
பெண் பலி
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள செஞ்சேரி வலசு பகுதியை சேர்ந்தவர் பிருந்தா (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (35). இவர்கள் 2 பேரும் கரூரில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஒரே மொபட்டில் ஊரில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.        அப்போது ரெட்டிப்பாளையம் பஸ் நிலையம் அருகே கரூர்-கோவை சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி பிருந்தா-சங்கீதா ஆகியோர் வந்து கொண்டிருந்த மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிருந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சங்கீதா படுகாயம் அடைந்தார். 
டிரைவர் மீது வழக்கு
இதுகுறித்து தகவலறிந்த கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிருந்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூைர சேர்ந்த பழனிச்சாமி (48) மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்