மலைத்தேனீக்கள் கடித்து 30 பேர் மயக்கம்

நச்சலூர் அருகே காதுகுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 30 பேரை மலைத்தேனீக்கள் கடித்ததில் அவர்கள் மயக்கம் அடைந்தனர்.

Update: 2021-08-20 17:34 GMT
நச்சலூர்
மலைத்தேனீக்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, வீரப்பூர் அருகே உள்ள ரெட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன்களான கவுதமன், ஹரிபிரசாந் ஆகியோரின் காதுகுத்து நிகழ்ச்சி கரூர் மாவட்டம் நச்சலூரை அடுத்து பொய்யாமணியில் உள்ள அரவாயி அம்மன் கோவிலில் நேற்று காலை நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் ரெட்டியப்பட்டியை சுற்றியுள்ள முத்துசாமியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கோவில் அருகே ஒரு மரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் கூட்டை யாரோ கலைத்துள்ளனர். 
30 பேர் மயக்கம்
இதனால் அந்த மலைத்தேனீக்கள் பறந்து வந்து காதுகுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த மாரியப்பன் (வயது 48), காமாட்சி (38), முருகேசன் (28), லட்சுமி (50), ேபாதும்பொண்ணு (33), குணா (7), சின்னசாமி (45) மற்றும் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேரை கடித்துள்ளது. 
 இதனால் வலி தாங்க முடியாமல் தவித்த அவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நங்கவரம் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, பொய்யாமணி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். 
பரபரப்பு
பின்னர் மயக்கம் அடைந்த 30 பேரையும் ஆம்புலன்சு மூலம் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் மாலையில் வீடு திரும்பினர். 
காதுகுத்து நிகழ்ச்சியில் மலைத்தேனீக்கள் கடித்து 30 பேர் மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்