விவசாயியை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது
வேதாரண்யம் அருகே விவசாயியை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே விவசாயியை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி கொலை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 48). விவசாயி. இவருக்கு திருமணமாகி செந்தாமரை என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் ரவி, கருப்பம்புலம் கடைவீதிக்கு வந்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் ரவி கொலை செய்யப்பட்டார்.
முன்னாள் ராணுவ வீரர் கைது
இதுகுறித்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரவியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ரவியை கொலை செய்ததாக கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சிவராஜ் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரவியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சொத்து பிரச்சினை
இதை தொடர்ந்து சிவராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். உறவினர்களான ரவிக்கும், சிவராஜிக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததும், இந்த முன்விரோதம் காரணமாக ரவியை, சிவராஜ் கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.