நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-20 12:37 GMT
வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா களக்காட்டூர் அடுத்த வேடல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி தலைவராக உள்ளார். இவர் தனக்கும் தனது தம்பிக்கும் சொத்தை பிரித்து கொள்வது சம்பந்தமாக நிலத்தை அளவீடு செய்து தரும்படி வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் கடந்த 2019- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக நில அளவை தடை ஏற்பட்டது

சரவணன் பலமுறை வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கு நில அளவையராக பணிபுரியும் இந்துமதி (வயது 35) என்பவரை சந்தித்து இது குறித்து கேட்டு வந்தார்.

நில அளவையர் இந்துமதி பல்வேறு காரணங்களை கூறி தவிர்த்து வந்தார். இந்த நிலையில் சரவணன் தனது நண்பர் மூலம் இந்துமதியிடம் பேசியபோது பணியை முடித்து கொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் இந்துமதியை சந்தித்த சரவணனிடம் முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக தனது உதவியாளர் சுதன் (26) என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

லஞ்சம் கேட்பது குறித்து சரவணன், காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் சரவணன், இந்துமதியை சந்தித்து லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரத்தை அளித்தார். அதனை தனது உதவியாளர் சுதனிடம் இந்துமதி அளித்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இந்துமதியையும், அவரது உதவியாளரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்