போலி கடன் பத்திரம் தயாரித்து பெண்ணிடம் மோசடி; முதியவர் கைது

போலி கடன் பத்திரம் தயாரித்து பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-20 09:51 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பட்டரைப்பெருமந்தூர் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி குமாரி (வயது 62). கடந்த 2015-ம் ஆண்டு குமாரி தனது கணவரின் மருத்துவ செலவுக்காக திருவள்ளூர் முகமது அலி தெருவை சேர்ந்த கர்ணன் (61) என்பவரிடம் ரூ.2 லட்சத்தை கடனாக பெற்றார்.

அதற்காக அவர் மாதாமாதம் வட்டி செலுத்தி வந்தார். ரூ.2 லட்சம் கடனுக்காக குமாரி தன்னுடைய வீட்டு காலி மனையை அடமானம் வைத்தார். அதை பெற்று கொண்ட கர்ணன் மேலும் ரூ. 3 லட்சத்தை குமாரி பெற்றது போல் போலியாக கடன் பத்திரத்தை தயாரித்து அதில் தானே கையெழுத்து போட்டு மோசடி செய்தார்.

மேலும் அவர் குமாரியிடம் ரூ.8 லட்சம் தர வேண்டும். இல்லை என்றால் வீட்டுமனையை தன்னுடைய பெயருக்கு எழுதி தரவேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை கர்ணனை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்