குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகும் குழந்தை பிறந்தது: மனைவிக்கு இழப்பீடு கேட்டு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகும் குழந்தை பிறந்தது. இதனால் மனைவிக்கு இழப்பீடு கேட்டு தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்
கூலித்தொழிலாளி
சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராமச்சந்திரன் (வயது 46), இவருடைய மனைவி சீதா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு சீதாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகும் சீதா கருவுற்றார். தொடர்ந்து 2015-ம் ஆண்டு சீதாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்து இறந்தது.
இதைதொடர்ந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததால் மனைவிக்கு இழப்பீடு கேட்டு ராமச்சந்திரன் விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அதிகாரிகள் ரூ.30 ஆயிரம் இழப்பீடு தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் அந்ததொகை ராமச்சந்திரனுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ராமச்சந்திரன் நேற்று வந்தார். பின்னர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகும் குழந்தை பிறந்ததால் தன்னுடைய மனைவிக்கு வழங்குவதாக கூறிய இழப்பீடு தொகையை தர வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
பின்னர் திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு முன்னதாகவே சீதாவின் கர்ப்பப்பையில் இருந்த கரு வளர்ச்சி அடைந்து குழந்தை பிறந்துள்ளது. எனவே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் தோல்வி ஏற்படவில்லை. அதனால் அவருக்கு இழப்பீடு வழங்க முடியாது என மாநில குடும்ப கட்டுப்பாடு அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் அவருக்கு இழப்பீடு வழங்க முடியாது என்றனர்.