18 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது
18 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கு, போலீஸ் அதிகாரி அறிவுறுத்தினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடையில் பணிபுரியும் விற்பனை மேற்பார்வையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கபிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். 18 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது. கொரோனா தொற்று பரவி வருவதால் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செல்வராஜ், தாசில்தார் பாரதிவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.